இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி
இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை அதிரடியாக நீக்கினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா. இதையடுத்து புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.
ஆனால் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக ரணில் விக்கிரமசிங்கே கூறிவந்தார். இந்த நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.
இன்றைய கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்துக்கு பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த ராஜபக்சே நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். மேலும் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.
இதையடுத்து நாடாளுமன்றம் இன்று ஒத்திவைக்கப்பட்டு நாளை மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.