ராமதாஸ், தினகரன், கமல்... உதயமாகிறது மூன்றாவது அணி! Exclusive

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் தனி அணி உருவாக்கப் பாடுபட்டு வருகிறார் ராமதாஸ். 'தி.மு.க தலைமையில் மட்டுமே கூட்டணி' என்பதில் சோனியா தெளிவாக இருப்பதால், தினகரனும் ராமதாஸும் அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளனர். 'இந்த மூன்றாவது அணியில் கமலும் இணைய இருக்கிறார்' என்கின்றனர் பா.ம.க வட்டாரத்தில்.

மத்திய பா.ஜ.க அரசுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருப்பதால், அந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு எந்தக் கட்சிகளும் விருப்பம் தெரிவிக்கவில்லை. மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரலாம் என்ற பேச்சு இருப்பதால், இப்போதே துண்டு போடும் வேலைகளைச் செய்து வருகின்றன சில கட்சிகள்.

'தி.மு.கவைத் தவிர்த்து எங்களுடன் வந்தால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி' என நேரடியாக அழைப்பு விடுத்துவிட்டார் தினகரன். அவரது பேச்சுக்களை காங்கிரஸ் முகாமில் திருநாவுக்கரசரைத் தவிர வேறு யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ராமதாஸ், தினகரன், கமல் என ஒரு புதிய மசாலா கலவையைத் தயாரித்து ராகுலிடம் டெமோ காட்ட நினைத்தார் திருநாவுக்கரசர். இதனை ராகுல்காந்தி ஏற்கவில்லை.

இதனையடுத்து, புதிய கூட்டணி ஃபார்முலாவைத் தயாரித்து வருகிறார் ராமதாஸ். அதன்படி, 'தினகரனோடு கூட்டணி வைத்துப் போட்டியிட்டால், நிச்சயம் வெற்றி பெறுவோம். பத்து தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றி பெறுவோம். வடபுலத்தில் பல மாவட்டங்களில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்.

களத்தில் பிரதான போட்டியாளர்கள் என்று யாரும் இல்லை. அன்புமணி தலைமையில் புதிய மாற்றத்தைத் தமிழகம் சந்திக்கப் போகிறது. பல தொகுதிகளில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறோம்' எனப் பேசியிருக்கிறார் டாக்டர்.

இதனால் தொண்டர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

திரைப்பட நடிகர் ரஞ்சித்தைக் கட்சியில் சேர்த்தபோதே, சினிமா எதிர்ப்பு மனநிலையில் இருந்து பா.ம.க விலகிவிட்டதாகப் பேச்சு கிளம்பியது. கமலோடு கூட்டணி சேர நினைப்பதும் ஒத்த கருத்தின் அடிப்படையில்தானாம்.

அந்தவகையில், இந்த மூவர் அணி நாடாளுமன்றத் தேர்தலை அசைத்துப் பார்க்கும் என நம்புகிறார் டாக்டர். இந்தத் தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகள் கிடைத்துவிட்டால், அடுத்து வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தலைமையிலான அணி கோட்டையைப் பிடிப்பது உறுதி எனவும் எதிர்பார்க்கிறாராம் ராமதாஸ்.

- அருள் திலீபன்

More News >>