உங்களை பாலோ பன்னுவதற்கு சாகலாம் - தண்டனைக்குப் பின் லாலு ட்வீட்
பாஜகவின் விதியை பின்பற்றுவதை விட சமத்துவம், சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக மகிழ்ச்சியோடு உயிரை விடுவேன் என்று தண்டனைக்கு பின் லாலு பிரசாத் யாதவ் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரை சார்ந்த சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்பட 16 பேர் குற்றவாளி என கடந்த மாதம் 23ம் தேதி தீர்ப்பளித்தனர். இவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த 3ம் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால், 3ம் தேதியன்று நாளை (4ம் தேதி) அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதிக்கு லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள் சிலர் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து 4ம் தேதியும் தண்டனை விவரம் அறிவிக்கப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை இன்று மாலை 4 மணியளவில் நீதிபதி சிவபால் 2400 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்தார். இதில், முதல் குற்றவாளியாக லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள லாலு பிரசாத் யாதவ், ‘எங்களை பின்பற்றுங்களை இல்லையென்றால் உங்களை முடித்துவிடுவோம்’ என்ற பாஜகவின் விதியை பின்பற்றுவதை விட சமத்துவம், சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக மகிழ்ச்சியோடு உயிரை விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.