திமுகவுக்கு ஷாக் கொடுக்க சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் ரஜினிகாந்த் Exclusive

காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைப்பதில் ஆந்திரா முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். தற்போது சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்தும் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பிரமாண்ட கூட்டணியை அமைப்பதை பாஜக விரும்பவில்லை. இந்த கூட்டணியில் இடம்பெறக் கூடிய கட்சிகளை தனிமைப்படுத்துவதில் பாஜக மும்முரமாக இருந்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் எப்படியாவது திமுகவை கூட்டணி கட்சிகளிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என பாஜக முயற்சித்து வருகிறது. அண்மையில் சென்னை வந்த சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியில் திமுக இடம்பெறும் என வெளிப்படையாக ஸ்டாலின் அறிவித்தார். இதை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை.

இதனால் திமுகவுக்கு அதிர்ச்சி தரும் நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறதாம். இதன் ஒரு கட்டமாக சந்திரபாபு நாயுடு-ரஜினிகாந்த் சந்திப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.

ஏற்கனவே திமுக அணியில் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறது தமிழக காங்கிரஸ். டெல்லி மேலிடத்தின் உத்தரவால்தான் திமுக அணியிலேயே தொடர்ந்து நீடித்தும் வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த்- சந்திரபாபு நாயுடு சந்திப்பு நடைபெற்றால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் என்பதுதான் பாஜகவின் எதிர்பார்ப்பு என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

- எழில் பிரதீபன்

More News >>