புதுவையில் தினகரன் - அன்புமணி ரகசிய சந்திப்பு- உறுதியானது கூட்டணி!- Exclusive

திமுக தலைமையிலான கூட்டணிக்கு போட்டியாக தினகரன், கமல் கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைக்க இருப்பதாக நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது தினகரனின் அமமுகவுடன் பாமக கூட்டணி என்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் புதுவையில் தினகரனும் அன்புமணி ராமதாஸும் அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசியல் கட்சிகளில் ‘திராவிட’ என்ற சொல்லை பயன்படுத்தாதவை பாமகவும் அமமுகவும்தான். பாமகவை பொறுத்தவரையில் முதல் எதிரியாக பார்ப்பது திமுகவை மட்டும்தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக கலகலத்துப் போய்விட்டது. அரசியல் களத்தில் வலிமையான தோற்றத்துடன் இருக்கும் ஒரே கட்சி திமுக. அக்கட்சியை பலவீனப்படுத்துவதில் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஆர்வம் காட்டி வருகின்றன.

பாமகவும் திமுகவை வீழ்த்துவதில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் வட தமிழகத்தில் வன்னியர்கள் சமூகத்தில் இன்னமும் செல்வாக்குடன் திமுக இருந்து வருகிறது. இதனால் பாமக பல தொகுதிகளில் 2-வது இடத்துக்கு தள்ளப்படுகிற நிலைதான் இருந்து வருகிறது.

ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கினால் திமுகவை ஆட்டம் காண செய்துவிட முடியும் என்பது பாமகவின் வியூகம். இதனால் தினகரனுடன் கை கோர்க்க பாமக முடிவு செய்தது.

இதையடுத்து கடந்த மாதம் கோனேரிகுப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டகல்லூரி திறப்பு விழா நாளின் போது தைலாபுரத்தில் அன்புமணி ராமதாஸ் முகாமிட்டிருந்தார். அதேநாளில் புதுவையில் உள்ள பண்ணை வீட்டில் தினகரன் தங்கியிருந்தார்.

தினகரனிடம் இருந்து அழைப்பு வந்ததைத் தொடர்ந்து புதுவைக்கு சென்ற அன்புமணி கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையின் போது, ஆட்சி அதிகாரம் இல்லை என்கிற போது அதிமுக முழுமையாக என் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

மேலும் முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகம் இணைந்தால் நாம் 10 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என தினகரன் கூறியிருக்கிறார். இதை ஆமோதித்த அன்புமணியும் கூட்டணிக்கு தயார் என சிக்னல் கொடுத்திருக்கிறார் என்கின்றன பாமக வட்டாரங்கள்.

-எழில் பிரதீபன்

More News >>