யூடியூப் விஆர் செயலி ஆக்கியூலஸ் கோவில் கிடைக்கிறது
By SAM ASIR
யூடியூப்பின் விஆர் என்னும் செயலி, ஹெட்செட் மூலம் மெய்நிகராக காட்சிகளை 360 பாகை (degree) கோணத்தில் காண உதவுகிறது. பயனர்கள் தாங்கள் பார்க்கும் வீடியோக்களை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும். அதன் மூலம் அவர்களும் அதே நேரத்தில் ஒளிப்பதிவினை காண இயலும். வேறு நிறுவன தயாரிப்பு கருவிகளை (headset) பயன்படுத்துவர்களோடும் காட்சிகளை பகிர்ந்து கொள்ள முடியும். இன்னிசை நிகழ்ச்சிகளின் நேரலை மற்றும் ஆவணப்படங்கள், ஒளிகோப்புகள் ஆகியவற்றை இணைந்து காண முடியும். ஆக்கியூலஸின் Quest 6DOF All-in-One VR headset சந்தைக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலான காலம் கடந்த நிலையில் அதற்கான மெய்நிகர் செயலியை யூடியூப் வெளியிட்டுள்ளது. ஆக்கியூலஸ் ஸ்டோரிலிருந்து இதை நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெய்நிகர் கருவியான Oculus Go headset வாங்குபவர்களுக்கு இது கூடுதல் வசதியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான டேடிரீம் மெய்நிகர் கருவி (Daydream VR headsets) உள்ளடக்கத்திலும், சிறப்பம்சங்களிலும் சோனி மற்றும் சாம்சங் நிறுவன தயாரிப்புகளுக்கு இணையாக இல்லாத நிலையில், ஆக்கியூலஸ் கோ சாதனங்களில் யூடியூப் மெய்நிகர் செயலி பயன்பட இருப்பதன் மூலம் இன்னும் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.