சபாநாயகர் மீதான தாக்குதல்- ஸ்டாலின் ஜலதோஷம் இலங்கையில் தொற்றிக் கொண்டது: ஜெயக்குமார்
இலங்கையில் சபாநாயகர் மீதான தாக்குதல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலினின் ஜலதோஷம் இலங்கையில் தொற்றிக் கொண்டது என விமர்சித்தார்.
தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பெரும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது தாம் தாக்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ரணில் விக்கிரமசிங்கே மற்றும் மகிந்த ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். சபாநாயகர் கருஜெயசூர்யா தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், சபாநாயகரை தாக்குவது போன்ற ஸ்டாலினின் ஜலதோஷம் இலங்கையிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது என விமர்சித்தார்.
மேலும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தற்போது டிரைலர் ஓடிக் கொண்டிருக்கிறது; விரைவில் திரைப்படம் வெளியாகும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.