ஜூலி நடிக்கும் டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ். படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு
பிக்பாஸ் ஜூலி நடிக்கும் டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் படத்துக்கு தடை விதிக்க கோரி அரியலூர் அனிதாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரியலூரைச் சேர்ந்த அனிதா பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை.
இதனால் அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அனிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை அஜய்குமார் தயாரித்து இயக்குவதாக அறிவித்தார். இப்படத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் பிக்பாஸ் புகழ் ஜூலி நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மகளின் தியாகம், போராட்டத்தை முன்வைத்து இயக்குநர் அஜய்குமார் பணம் சம்பாதிக்க திட்டமிடுவதாகவும் தமக்கு ரூ25 லட்சம் மானநட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அனிதாவின் தந்தை சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளரும் இயக்குநருமான அஜய்குமார் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.