நாகை துறைமுகத்தில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்- பாக் ஜலசந்தியில் பெரும் அமைதியால் பீதி!
கஜா புயல் மிகவும் தீவிரமடைந்துள்ளதை குறிக்கும் வகையில் நாகை துறைமுகத்தில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பாக் ஜலசந்தி கடல்பகுதி வழக்கத்துக்கு மாறாக பெரும் அமைதியுடன் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நாகை அருகே கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்க இருக்கிறது. தற்போது நாகை அருகே இப்புயல் நகர்ந்து வருகிறது.
இதனால் நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் மிக தீவிர புயலைக் குறிக்கும் வகையில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. நாகை துறைகத்தில் அதி தீவிர புயல் என்பதை குறிக்கும் வகையில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் கடலூர் துறைமுகத்தில் 9-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. மேலும் கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்பவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்த 7 மாவட்டங்களில் மாலை முதல் நாளை காலை வரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனிடையே ராமேஸ்வரத்தில் பாக்ஜலசந்தி கடற்பரப்பு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருப்பது அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.