இணைய பாதுகாப்பு வழிகாட்டல்: இந்திய மொழிகளில் தொடங்கியது கூகுள்

கூகுள் நிறுவனம், இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு வழிகாட்டல், தகவல்களை முக்கியமான தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளது.

கூகுள் பாதுகாப்பு மையம் (Safety Center) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் மேலான கட்டுப்பாடு (data security, privacy controls )குறித்து பயனுள்ள குறிப்புகளையும், குடும்பம் மற்றும் நட்பு நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தை பயன்படுத்தக்கூடிய ஆலோசனைகளையும் தருகிறது.

கூகுளின் இந்த பாதுகாப்பு வழிகாட்டுதல் சேவை, நவம்பர் 14ம் தேதி, புதன்கிழமை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ், ஹிந்தி, வங்கம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் கூகுள் வழிகாட்டல் கிடைக்கிறது.

"கூகுள் சேவைகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பது குறித்து பயனர்களுக்கு உதவி செய்வதே கூகுள் பாதுகாப்பு மையத்தின் நோக்கம். சேவை குறித்த எங்கள் அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. இந்த வழிகாட்டுதல்கள் மூலம் இணையத்தை பயனர்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்," என்று கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு துறை இயக்குநர், மார்க் ரிஷர் தெரிவித்துள்ளார்.

"இணையத்தை பயன்படுத்தி வருபவர்கள் மற்றும் புதிதாக பயன்படுத்த தொடங்குபவர்கள் இணைய உலகில் நேரக்கூடிய அசம்பாவிதங்கள், எதிர்மறை விளைவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இணைய ஆபத்துகள் குறித்து பயனர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை நாங்கள் உணர்ந்துள்ளோம், என்று கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறைக்கான இயக்குநர் சுனிதா மொஹந்தி கூறியுள்ளார்.

கூகுள் பயனர் கணக்கு, சாதனங்கள் மற்றும் செயலிகளை பாதுகாப்பாக நிர்வகிக்கும் வகையில் பெற்றோர் அவற்றுக்கான செயல்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஃபேமிலி லிங்க் (Family Link app) என்ற செயலியையும் கூகுள் சமீபத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>