கொழும்பில் ரணில் பிரமாண்ட போராட்டம்- தேர்தல்களுக்கு தயார் என சவால்!
இலங்கை தலைநகர் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள தயார் என சவால் விடுத்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால் இதனை ஏற்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருந்தார்.
இதனிடையே இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இதில் மகிந்த ராஜபக்சே உரையாற்றியதற்கு ரணில் ஆதரவு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ரணில், ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
எம்.பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இந்த நிலையில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட போராட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்; இரு தேர்தல்களையும் நடத்த ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என்றார்.