சபரிமலையில் நாளை நடை திறப்பு- பெண்களுக்கு அனுமதி: பினராயி விஜயன்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மகரவிளக்கு பூஜைக்காக நாளை திறக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் அனுமதிக்கப்படுவர் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கேரளா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

ஆனால் இக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்போம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதேநேரத்தில் பந்தள மன்னர் குடும்பமோ பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

ஜனவரி 14-ந் தேதி வரை மொத்தம் 41 நாட்கள் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பெண்களும் அனுமதிக்கப்படுவதால் போராட்டங்கள் எதுவும் நடைபெறாத வகையில் 10,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எருமேலி, நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

More News >>