சர்கார் படத்தில் இந்து கடவுளுக்கு அவமரியாதை- மலேசியாவில் போர்க்கொடி!

விஜய் நடித்த சர்கார் திரைப்படத்துக்கு தமிழகம், கேரளாவில் எதிர்ப்பு எழுந்தது. தற்போது மலேசியாவிலும் சர்கார் திரைப்படத்துக்கு எதிராக பஞ்சாயத்து வெடித்துள்ளது.

தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததாலும் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி பெயரை வில்லி பாத்திரத்துக்கு வைத்ததாலும் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தினர். இதனால் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

சர்கார் திரைப்படம் புகை பழக்கத்தை ஊக்குவிப்பதாக கேரளாவில் சர்ச்சை வெடித்தது. நடிகர் விஜய் மீது வழக்கும் போடப்பட்டது.

தற்போது நாடுவிட்டு நாடு போய் சர்கார் பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. சர்கார் திரைப்படத்தில் இந்து கடவுள் ‘கிருஷ்ணர்’ சிலை தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக மலேசியா இந்து சங்கத்தின் தலைவர் டத்துக் ஆர்.எஸ்.மோகன் ஷான் புகார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மலேசிய தணிக்கை வாரியத்திடமும் அவர் புகார் கொடுத்தார். இந்துக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் டத்துக் ஆர்.எஸ்.மோகன் ஷான் தணிக்கை வாரியத்திடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து தணிக்கை குழு இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கைக் குழு ஒப்புதல் தெரிவித்தது. சர்ச்சைக்குரிய அந்த காட்சி இல்லாமல் நாளை முதல் சர்கார் திரைப்படம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>