உதறலில் தினகரன் - இடைத் தேர்தல்களை நிறுத்தி வைக்க போராடும் பாஜக ஸ்லீப்பர் செல்கள்!- Exclusive

இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி தயாராகி வருவதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். ' பா.ஜ.கவில் உள்ள சோர்ஸுகள் மூலம் தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளில் தினகரனும் இறங்கிவிட்டார்' என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும்போது, ' நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை' எனப் பேட்டியளித்தார்.

அவரது இந்தப் பேட்டியை நொடிக்கொரு தரம் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது தினகரனின் ஜெயா தொலைக்காட்சி. அதேபோல், 'பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது ஆளும்கட்சி' என தங்க.தமிழ்ச்செல்வன் பேசியதையும் தொடர்ந்து ஒளிபரப்புகின்றனர்.

இதுகுறித்துப் பேசும் பா.ஜ.க தமிழக நிர்வாகி ஒருவர், 'ஆர்.கே.நகர் போல மற்ற 20 தொகுதிகளின் வெற்றியும் அமையப் போவதில்லை என தினகரனுக்கு நன்றாகவே தெரியும். தேர்தலை எதிர்கொள்வது போல வெளியில் பேசினாலும், உள்ளுக்குள் அவருக்கு உதறல் இருக்கத்தான் செய்கிறது.

இந்தமுறை ஆளும்கட்சி கோட்டை விடப் போவதில்லை என்பதையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். தி.மு.கவுக்கும் இது வாழ்வா...சாவா போராட்டம்.

இடைத்தேர்தலை எதிர்கொள்வதைவிட, நேரடியாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். கட்சிகளின் மனநிலையை அறிந்து, பா.ஜ.கவும் இந்த 20 தொகுதிகளின் தேர்தலை மையமாக வைத்து கேம் ஆடத் தொடங்கியிருக்கிறது.

இதன்மூலம், 'நம்மிடம் பேசுவதற்குத் தமிழக கட்சிகள் வருவார்கள்' என நம்புகிறார் மோடி.

அ.ம.மு.க தொண்டர்கள் மத்தியில் சோர்வு தென்படுவதால், 20 தொகுதிகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார் தினகரன்.

அதனால்தான், பா.ஜ.கவுக்குள் இருக்கும் தன்னுடைய ஸ்லீப்பர் செல்கள் மூலம், தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். அதையொட்டியே இன்று எச்.ராஜாவின் பேச்சு இருந்ததால்தான், ஜெயா டி.வியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். 'ஆட்சியைத் தக்க வைக்க எட்டு எம்.எல்.ஏக்கள் வேண்டும்' எனக் கட்சி கூட்டத்திலேயே உறுதிபடக் கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

` 20 தொகுதிகளுமே எங்களுடைய டார்கெட்' என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ம் பேசியிருந்தார். 'தன்னுடைய தலைமை பேசப்பட வேண்டும்' என்பதற்காக, தற்போதே அனைத்து அமைச்சர்களையும் களமிறக்கிவிட்டுவிட்டார் பழனிசாமி.

இந்தமுறை அ.தி.மு.க கோட்டை விடாது என்பதில் அமைச்சர்களும் உறுதியாக உள்ளனர். இதை அறிந்த பிறகே, 20 தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்த முடியுமா என டெல்லி சோர்ஸுகள் மூலம் லாபி செய்து வருகிறாராம் தினகரன்.

-அருள் திலீபன்

More News >>