நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது கஜா புயல் !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சூறையாடி வரும் கஜா புயல் நாகை & வேதாரண்யம் இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வலுவடைந்த கஜா புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வேதாரண்யம் & நாகை இடையே நள்ளிரவில் கரையை கடக்க தொடங்கியது. இதனால், 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. முதலில் கஜா புயலின் கண்பகுதியில் பாதியளவு மட்டுமே கரையை கடந்தது. இதன் பிறகு, இரண்டு மணி நேரத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கஜா புயல் முழுமையாக கடந்துவிட்டது. இருப்பினும், புயலின் தாக்கம் குறைந்து சாதாரண சூழலுக்கு வர இன்னும் 6 மணி நேரம் ஆகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் தாக்கம் எதிரொலியால், வேதாரண்யத்தில் வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. நாகை, வேதாரண்யத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. இதையடுத்து, தயார்நிலையில் இருந்த மீட்புக் குழுவினர் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மின் விநியோகம் பொறுத்தவரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

புயலுக்கு பின் மழை..

கஜா புயல் கரையை கடந்துவிட்ட போதிலும், தஞ்சை, கும்பகோணம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காரைக்காலின் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நாகையில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

More News >>