இனி கவர்ச்சி இல்லை கதைக்குத்தான் முக்கியத்துவம்!
மலையாள திரையுலகு மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணி மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளார்.
கோலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் காரக்குடி இளவரசி நிக்கி கல்ராணியின் முதல் சினிமா என்றால் அது ‘1983’ எனும் மலையாள படம் தான். அந்த படமே அவருக்கு நல்ல அறிமுகத்தையும் விருதுகளையும் தேடித் தந்தது. அதன் பிறகு, கன்னட படங்களில் நடித்த நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷின் டார்லிங் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகதநாணயம் போன்ற பல படங்கள் வெற்றிப் படமாகவே அமைந்தன.
அடுத்ததாக தமிழில் சார்லி சாப்ளின்2 மற்றும் கீ படங்கள் ரிலீசுக்கு காத்துக் கிடக்கின்றன.
இந்நிலையில், மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளார் நிக்கி கல்ராணி. தமிழில் கவர்ச்சி நாயகியாக வலம் வரும் நிக்கி, இதிகாஷா 2 எனும் மலையாள படத்தில் பழங்குடியின பெண்ணாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கவுள்ளாராம்.
இதற்காக, தீவிர நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் நிக்கி கல்ராணி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இந்திரஜித் நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் நவம்பர் 25ஆம் தேதி கொச்சியில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.