கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்திய திருப்தி தேசாய்- ஐயப்ப பக்தர்கள் முற்றுகை!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக கொச்சிக்கு வருகை தந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மகராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் திருப்தி தேசாய். புகழ்பெற்ற சிங்க்னாபூர் சனி பகவான் கோவில், ஹாலி அலி தர்கா உள்ளிட்ட பல்வேறு மத வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிக்கக் கோரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் திருப்தி தேசாய்.

ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தாமும் சபரிமலைக்கு வரப் போவதாக அறிவித்திருந்தார் திருப்தி தேசாய். அத்துடன் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க கோரி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் கடிதமும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் திருப்தி தேசாயும் அவரது ஆதரவாளர்களும் இன்று அதிகாலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு மகாராஷ்டிராவுக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.

இதனால் கொச்சி விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்துத்துவா அமைப்பினர் இதை ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

More News >>