கஜா: மீட்புப் பணிகளில் சீருடை அணியாத ராணுவமாக பணியாற்றுங்கள்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு மேற்கொள்ளும் மீட்புப் பணிகளில் இணைந்து திமுகவினர் சீருடை அணியாத ராணுவமாக பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. பலத்த வேகத்துடன் கரை கடந்த கஜா புயலினால் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

திருச்சி, அரியலூர், சிவகங்கை, மதுரை, தேனி,சேலம் போன்ற தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது புயல் காற்றின் கோர தாண்டவத்தைக் காட்டுகிறது.

கடலோரப் பகுதிகளான நாகை, வேதாரண்யம், கடலூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் புயல்காற்றில் மரங்களும் மின்கம்பங்களும் கூரைகளும் சரிந்து விழுந்து கிடக்கும் காட்சிகள் மனவேதனையைத் தருகின்றன.

இப்பகுதிகளில் மின்தடையும் போக்குவரத்து முடக்கமும் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. புயலின் பின் விளைவுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்த செய்திகள் அதிர்ச்சி தருகின்றன.

இந்த நிலையினைச் சீர் செய்து சகஜநிலை திரும்பி மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடந்திட, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன். புயல் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் (Tamilnadu Disaster Management board) முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது. அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும்.

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும், வீடு –உடைமைகள்-கால்நடைகளை இழந்த மக்களுக்கும், சிகிச்சை பெறுவோர்க்கும் உரிய நிவாரணமும் இழப்பீடும் விரைந்து கிடைத்திட வேண்டும்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு, உடை, படுக்கை வசதி, மருத்துவ வசதி போன்றவை போதுமான அளவுக்கு குறையேதுமின்றிச் செய்து தரப்பட வேண்டும்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியமாகும். தாமதமும் அலட்சியமும் காட்டினால், 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட செயற்கை வெள்ள பாதிப்புகளைப் போல ஏராளமான இழப்புகள் ஏற்படும் என்பதையும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தி.மு.க.வினரின் கடமை. புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள தி.மு.கழக நிர்வாகிகளும் கழகத்தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களும் கழகத் தொண்டர்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, நிலைமையைக் கண்டறிந்து மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சீருடை அணியாத ராணுவம் போல களமிறங்கி, அரசுத் தரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றுவீர்! எல்லா நிலையிலும் தமிழ்நாட்டு மக்களுக்குத் துணை நிற்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமையாகும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More News >>