திண்டுக்கல்லையும் பதம் பார்த்த கஜா புயல்
தமிழக கடலோர மாவட்டங்களில் கோரத்தாண்டவமாடிய கஜா புயல் உள்மாவட்டமான திண்டுக்கல்லையும் சூறையாடியிருக்கிறது.
கஜா புயல் வேதாரண்யம் பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் நாகை, வேதாரண்யத்தில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வேதாரண்யம் தனித் தீவைப் போல காட்சி தருகிறது. இந்த புயலானது கரையை கடந்து திண்டுக்கல் பகுதியில் மையம் கொண்டிருந்தது.
அப்போது திண்டுக்கல்லில் 60- 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. பிற்பகலில் இப்புயல் கொடைக்கானலை கடந்து கேரளாவை நோக்கி சென்றது.
இதனால் கொடைக்கானலில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பழநி - கொடைக்கானல் சாலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளதால் அப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்கள் பாதித்த நிலையில் உள் மாவட்டமான திண்டுக்கல்லையும் கஜா புயல் தாக்கியிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இப்புயலின் தாக்கத்தால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கட்டிடங்கள் இடிந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் காலை முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேநேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல கிராமங்களில் ஓடைகள், குளங்கள் நிரம்பி இருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.