விமர்சனம்: கரை சேராத காற்றின் மொழி!

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படம் தென்றலாக வருடவும் இல்லை; கஜா புயலாக வீசவும் இல்லை. மொத்தத்தில் கற்றே இல்லை.

மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் மீண்டும் ஜோதிகாவை வைத்து படம் இயக்குகிறார் என்றதுமே படம் வேற லெவலுக்கு கம் பேக் ஜோதிகா என சொல்லும் அளவிற்கு வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய நாமத்தை ராதா மோகன் போட்டு விட்டார்.

வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியான தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்கை தமிழில் ஜோதிகாவை வைத்து ராதாமோகன் இயக்கினார். ஆனால், அந்த படத்தில் இருந்த எதார்த்தம் இந்த படத்தில் லாஜிக் மீறல்களாகவோ, திணிக்கப்பட்ட காட்சிகளாகவோ அமைக்கப்பட்டு படத்தின் உண்மை தன்மையை பெரிதும் சிதைத்து விட்டது.

கதைக் களம்:

நடுத்தர குடும்ப தலைவியாக இருக்கும் ஜோதிகா, வீட்டிலேயே அடைந்து கிடக்கக் கூடாது என்றும் தனக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறார். அந்த தேடலில் ரேடியோ ஒன்றில் ஜாக்கியாக வேலை செய்கிறார். ஆனால், அந்த ஷோ இரவு 10 மணிக்கு மேல் வரும் ஒரு அஜால் குஜால் ஷோ என்பதால், அவரது வேலைக்கு வீட்டில் இருப்போர் தடை கல்லாக மாறுகின்றனர். இந்த போராட்டங்களை எப்படி ஜோதிகா எதிர்கொண்டு பெண்ணுரிமையை நிலைநாட்டுகிறாரா? இல்லையா என்பதை மிகவும் பொறுமையை சோதிக்கும் திரைக்கதையின் மூலம் ரசிகர்களை தூங்க வைத்து விடுகிறார் ராதா மோகன்.

நல்ல இயக்குநர் என்ற பெயர் எடுத்த ராதா மோகனுக்கு கதை பஞ்சம் வந்துவிட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன்னர் மலையாள சினிமாவை ரீமேக் செய்து 60வயது மாநிறம் படத்தை இயக்கினார். அந்த படமும் பெரிதளவில் ஓடவில்லை. இந்நிலையில், வித்யாபாலன் நடித்த பாலிவுட் படத்தை ரீமேக் செய்துள்ளார். தமிழுக்கு ஏற்றவாறு படத்தின் போக்கை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், தேவையற்ற எக்ஸ்ட்ரா கேரக்டர்களை படத்தில் இணைத்து இரட்டை அர்த்த வசனங்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தி படத்தை சொதப்பியுள்ளார் ராதா மோகன்.

படத்தின் புரமோஷனுக்காக யோகிபாபு மற்றும் சிம்பு ஓரிரு காட்சிகளில் வந்து செல்கின்றனர். அவர்களின் காட்சி டீசர் மற்றும் டிரெய்லருக்கு மட்டுமே உதவும் வகையில் உள்ளது.

ஜோதிகாவின் நடிப்பு இந்த படத்தில் மெருகு ஏறுவதற்கு மாறாக பழைய ஓவர் ஆக்டிங் வந்து ஒட்டிக் கொண்டு விட்டது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான செக்கச்சிவந்த வானம் மற்றும் நாச்சியர் படங்களில் ஜோதிகா நடிப்பால் மெருகேறியிருந்தார். மீண்டும் ராதா மோகன் ஜோதிகாவின் நடிப்பாற்றலை வீணடித்து விட்டதாகவே தோன்றுகிறது.

மொத்தத்தில் காற்றின் மொழி கரை சேராத ஓடமாகவே உள்ளது. காத்து.. காத்து.. காத்துக்கு நான் எங்கடா போவேன்!

காற்றின் மொழி ரேட்டிங்: 1.75/5.

More News >>