ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை: ரோகித், கோலியை பின்னுக்கு தள்ளிய மிதாலி ராஜ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் ஹிட்மேன் ரோகித்தை விட டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்து முதலிடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்திய மகளிர் அணிக்கான உலக கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ், டி20 போட்டிகளில் 2283 ரன்கள் குவித்து ஆண் வீரர்களை மிஞ்சி முதலிடம் பிடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 51 ரன்களை குவித்த மிதாலி ராஜ், இந்த புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதுவரை 80 டி20 போட்டிகள் விளையாடியுள்ள இந்தியாவின் ஹிட்மேன் என அழைக்கப்படும் துணை கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 2207 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக கேப்டன் விராத் கோலி 58 போட்டிகளில் 2102 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக மிதாலி ராஜ் இந்த இரு ஜாம்பவான்களை மிஞ்சியிருப்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஆண்கள் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்திற்கும் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளின் சம்பளத்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது வேறு கதை.

More News >>