ஜிம்பாப்வேவில் பயங்கரம்: ஓடும் பேருந்து தீபிடித்து எரிந்ததில் 42 பயணிகள் உயிரிழப்பு
ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 42 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் ஸ்விஷாவானே என்ற பகுதியில் இருந்து தென்னாப்பிரிகாவில் உள்ள முசினா என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில், சுமார் 70 பயணிகள் பயணித்தனர்.
அப்போது, புலாவயோ - பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக இந்த பேருந்து நேற்று இரவு சென்றபோது திடீரென தீபிடித்து எரிந்தது. இதில் இருந்த பயணிகள் தீ விபத்து குறித்து சுதாரித்துக் கொண்டு, பேருந்தைவிட்டு தப்பிக்க முயல்வதற்குள் தீ மளமளவென பரவியது.
பேருந்தில் இருந்த 42 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை உயரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.