ரஜினிகாந்த் எப்படி சொன்னால் கேட்பாரோ அப்படி சொன்னோம் - அன்புமணி ஃபிளாஷ்
சிகரெட் பிடித்துக்கொண்டு இருப்பது போல் போஸ்டர் ஒட்டாதீர்கள் என்று கூறினோம். கேட்கவில்லை. பின்பு, எப்படி சொன்னால் கேட்பாரோ அப்படி சொன்னோம், கேட்டுக்கொண்டார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நேற்று சென்னை திருவல்லிக்கேணியில் லோக் ஆயுக்தா மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், "லோக் ஆயுக்தா அனைத்து பெரிய மாநிலங்களிலும் இருக்கிறது. ஊழலைக் குறைத்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இல்லை. ஏனென்றால், அதைக் கொண்டு வந்தால் முதல்வரிலிருந்து அனைத்து அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள்.
ரஜினிகாந்த் நான் கல்லூரியில் படிக்கும்போது அரசியலுக்கு வருவேன் என்று கூறினார். இப்பொழுது என் மகள் கல்லூரியில் படிக்கிறார். இப்பொழுதாவது சொல்லிவிட்டாரே!
அவரைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை. எங்களைப் பார்த்துதான் அவர் பயப்பட வேண்டும். 'சிகரெட் பிடித்துக்கொண்டு இருப்பது போல் போஸ்டர் ஒட்டாதீர்கள்' என்று கூறினோம், கேட்கவில்லை. பின்பு, எப்படி சொன்னால் கேட்பரோ அப்படி சொன்னோம், கேட்டுக்கொண்டார்.
'மத்திய அரசு காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும்' என்று மட்டுமாவது ரஜினி சொல்ல வேண்டும். ஆனால் சொல்ல மாட்டார். 400 கோடி செலவு செய்து எடுக்கப்படும் படத்தில் அவர் நடிக்கிறார். அதில் வரும் வருமானத்திற்கு ஒழுங்காக வரி கட்டுகிறாரா?
எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மட்டும் தான் ஒழுங்காக வரி கட்டுகிறார். தெரியாமல் சிலர் இருக்கலாம், தெரிந்து எனக்குத் தெரிந்து அவர் மட்டும்தான் அவ்வாறு இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.