தினகரன், திவாகரன் பக்கம் சாயும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்- எடப்பாடி தரப்பு அதிர்ச்சி!-Exclusive
எடப்பாடி முகாமுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் தினகரன். ` எம்.பிக்களுக்குள் இருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தத் திட்டமிடுகின்றனர். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என நிர்வாகிகளுக்கு அறிவுரை கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு தினகரன் ஆதரவாளர்கள் பலரும் சோர்ந்து போய்விட்டனர். அனைத்து நடவடிக்கைகளும் எடப்பாடிக்கு ஆதரவாகச் சென்று கொண்டிருப்பதை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் வலுவான தலைவராகக் காட்டிக் கொள்ளும் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதேநேரம், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலரையும் உளவுத்துறை கண்காணிப்பில் வைத்திருக்கிறார். தனக்கு எதிராக என்னென்ன வேலைகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து விரிவான அறிக்கைகளை தினம்தோறும் பார்த்துவிடுகிறார்.
அண்மையில், ராமநாதபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்தை வரவேற்றார் அமைச்சர் மணிகண்டன். திருமண மண்டப வாசல் வரையில் வந்து ஜெய் ஆனந்தை வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார் மணிகண்டன். இந்தத் தகவல் அ.தி.மு.க வட்டாரத்துக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிகழ்வின் அதிருப்தி ஓய்வதற்குள் செந்தில் பாலாஜியை சந்தித்துப் பேசியிருக்கிறார் திருச்சி மா.செவும் எம்.பியுமான குமார். இதனை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. உடனே சீனியர்களுக்குப் போன் செய்து, ' மாவட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். கட்சி நிர்வாகிகளின் போக்குகளைக் கவனியுங்கள்' என சத்தம் போட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்துப் பேசும் அ.தி.மு.கவினர், ' இந்த ஆட்சியில் எம்.எல்.ஏக்களுக்கு மட்டும்தான் மரியாதை. கட்சியின் எம்.பிக்களை பெயரளவுக்குக்கூட திரும்பிப் பார்ப்பதில்லை. மாவட்டங்களில் நடக்கும் பணிகளுக்கு உரிய கமிஷன் வந்து சேருவதில்லை. திட்டப் பணிகளிலும் எம்.எல்.ஏக்களே கோலோச்சுகின்றனர்.
இதுகுறித்துக் கேட்டால்கூட, ' இன்னும் ஆறு மாதங்களில் எம்.பி தேர்தல் வர இருக்கிறது. உங்களுக்குக் கமிஷன் கொடுப்பதால் என்ன லாபம்?' எனக் கேள்வி எழுப்புகின்றனர். இதே பிரச்னையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர் சிலர். அந்தநேரத்தில் எடப்பாடி தலையிட்டு விவகாரத்தை முடித்து வைத்தார்.
அ.தி.மு.க எம்.பிக்களை மோடியும் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. எந்தப் பயனும் இல்லாமல் முடங்கிக் கிடப்பதை சகிக்க முடியாமல்தான் தினகரன் தரப்புக்கு சிலர் தூதுவிடுகினறனர். தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் சிலரையாவது தன்பக்கம் அழைத்து வந்துவிட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார் தினகரன். அதன் ஒருபகுதியாகத்தான் செந்தில் பாலாஜியை சந்தித்தார் திருச்சி குமார்' என்றார்.
- அருள் திலீபன்