சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சியில் அசைவப் பிரியர்கள்

சென்னை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பிரியாணிகளில் நாய் கறி சேர்க்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, சென்னை எழும்பூர் ரயில் நிலைய போலீசார் 1000 கிலோ நாய்க்கறியை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரியாணி என்றாலே நாவூறும் நம் அசைவ பிரியர்களுக்கு.. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியில் ஆரம்பித்து தற்போது பல வகை பிரியாணிகள் நமக்கு கிடைக்கின்றன.

அப்படிப்பட்ட பிரியாணிகளில் நாய் கறி சேர்க்கப்படுவதும், அதுவும் சென்னையில் பிரபல உணவகங்களில் இதுபோன்ற பிரியாணிகள் சமைப்பதும் அசைவ பிரியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலும் பிரியாணிகளில் சிக்கன், மட்டன் தான் பிரபலம். கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்பட்ட கதைகளும் உண்டு. ஆனாலும், கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி தான் பிரியாணியில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதில் என்ன நிச்சயம் ?

இதற்கு சான்றாகவே, நாய்கறி பறிமுதல் சம்பவம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன்மூலம், எந்தெந்த பிரியாணி கடைகளில் நாய்க்கறி பிரியாணி சமைத்து பரிமாறப்படுகிறது போன்ற விவரங்கள் தெரியவரும் என்று கருதப்படுகிறது. மேலும், இன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரம் கிலோ நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பிரியாணியை விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News >>