நான் ஏழை பிராமணனுக்காக போராடுவேன் - தலித் இளம் தலைவர் ஜிக்னேஷ் மேவானி
தலித் முதலாளி ஒருவர், அங்கே வேலை பார்க்கும் பிராமணத் தொழிலாளி ஒருவர் மீது வன்முறையை அவிழ்த்து விட்டால், நான் அந்த ஏழை பிராமணனுக்காகவே போராடுவேன் என்று குஜராத் மாநில இளம் தலைவராக அறியப்படும் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களிலேயே மிகவும் ஏழை உறுப்பினராகத் தன்னை அறிவித்துக் கொள்ளும் ஜிக்னேஷ் மேவானி மிகவும் பெருமையாக சிரித்துக் கொண்டே, வத்கம் சென்ற போது சட்டைப்பையில் வெறும் எட்டாயிரம் ரூபாய் மட்டுமே என்னிடம் இருந்தது என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், “கடந்த எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக நான் பெரிதாக எதையும் சம்பாதித்திருக்கவில்லை. சொந்தமாக ஐம்பதினாயிரம் ரூபாய்கூட என்னிடம் இல்லை.
என்னுடைய தேர்தல் விண்ணப்பத்துடன் அறிவிக்கப்பட்ட நிகர சொத்து மதிப்பான பத்து லட்சம்கூட என்னுடைய தந்தை எனக்கென்று போட்டிருந்த காப்பீட்டுத் தொகையால் வந்ததே ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் களத்தில் என்னோடு பணி புரிந்தார்கள். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்று பலரும் ஆதரவு அளித்ததை நன்றியுடன் நினைவு கூறுகிறார் ஜிக்னேஷ் மேவானி.
மேலும், தனக்கு ஆதரவு அளித்த கட்சிகள் சிலவற்றோடு தனக்கு கொள்கை வேறுபாடுகள் இருந்த போதிலும், பாசிச அச்சுறுத்தலுக்கெதிராக அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியம் இருப்பதை சுட்டிக் காட்டினார்.
தலித் தலைவர் என்று முத்திரை குத்தப்படுவது குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு விடையளிக்கையில், ”ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று எல்லோருக்குமாக நான் போராடுகிறேன். தொழிற்சாலையை நடத்தும் தலித் முதலாளி ஒருவர், அங்கே வேலை பார்க்கும் பிராமணத் தொழிலாளி ஒருவர் மீது வன்முறையை அவிழ்த்து விட்டால், நான் அந்த ஏழை பிராமணனுக்காகவே போராடுவேன்” என்ற் தெரிவித்துள்ளார்.
நன்றி: தீக்கதிர்