கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தென்னக ரயில்வே விழுப்புரம் மற்றும் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது.
நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய இருநாட்களும் இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் காலை 7 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயான்டூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம் மற்றும் தண்டரை மார்க்கமாக நண்பகல் 12 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடையும். மறு மார்க்கத்தில் பிற்பகல் 1 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, அதே வழியில் விழுப்புரம் சந்திப்பை 2:45 மணிக்கு வந்தடையும்.
நவம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் ஒரு ரயில் இயக்கப்படும். இது நவம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் விழுப்புரம் சந்திப்பிலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலையை இரவு 11:40 மணிக்கு வந்தடையும். நவம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் அதிகாலை 4:15 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 5:55 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும்.
நவம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு மின்தொடர் வண்டிகளும் இயக்கப்பட உள்ளன. வேலூர் கண்டோன்மெண்ட்டிலிருந்து இரவு 9:30 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் மற்றும் துரிஞ்சாபுரம் ரயில் நிலையங்கள் வழியாக இரவு 11:20 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடையும்.
திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5:55 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட்டை வந்தடையும் என்று ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.