இத்தனை படங்களும் பொங்கலுக்கு ரிலீசாகுமா?

2019ம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை தமிழ் சினிமாவின் பல பெரிய படங்கள் குறிவைத்துள்ளன. அது அத்தனையும் ரிலீசாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் சர்கார் படத்திற்கு போட்டியாக அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே படங்கள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டன. தீபாவளிக்கு சில மாதங்களுக்கு முன்னர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் தீபாவளி ரிலீஸ் என கெளதம் மேனன் கேக் வெட்டி கொண்டாடினார். ஆனால் அந்த படம் எப்போது ரிலீசாகும் என்பது இதுவரை புரியாத புதிராகியுள்ளது.

இறுதியாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அதுவும் பின் வாங்கி, கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனது. பில்லா பாண்டி மட்டுமே சர்கார் படத்துடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. அதற்கும் குறைவான தியேட்டர்கள் கிடைத்ததால் படம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே (NGK), சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி(LKG) இன்னும் சில படங்களும் பொங்கலை குறிவைத்துள்ளன.இவை அனைத்தும் ஒரே நாளில் ரிலீசாவது உண்மையில் சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விளம்பரத்திற்காக இப்படி கூறிவிட்டு பல படங்கள் கடைசி நேரத்தில் பின் வாங்கும் சூழல் தான் உள்ளது.

அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட ஆகிய இரு படங்களும் சர்கார் வசூலை வீழ்த்த வேண்டும் என்றால் அதிக தியேட்டர்களில் ரிலீசாக வேண்டும். ஆனால், இப்படி பல முனை போட்டிகளுடன் ரிலீஸ் ஆனால், நிச்சயம் அது முதலுக்கே மோசமாகிவிடும்.

பொங்கல் பண்டிகையும் தீபாவளியை போலவே செவ்வாய் கிழமை வருகிறது. அதற்கு முந்தைய வாரமான வெள்ளிக் கிழமை படங்கள் ரிலீசானால் இரண்டு வாரங்கள் நல்ல வசூலை ஈட்டும், செவ்வாய் கிழமை வெளியானாலும் 6 நாள் வசூல் உறுதி. ஆனால், ரஜினி, அஜித் படங்களை தவிர மற்றவர்களுக்கு பெரும்பாலான தியேட்டர்கள் ஒதுக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ரஜினியின் 2.0 இம்மாத இறுதியில் வெளியாகும் நிலையில், அதன் வசூலும் பொங்கல் ரிலீஸுக்கு கருத்தில் கொள்ளப்படும் என்பதால், பொங்கலுக்கு வருவேன் என வீம்பு பிடிப்பவர்கள் கடைசி நேரத்தில் சொன்னதை செய்கின்றனரா என்பதை பார்ப்போம்.

More News >>