உலககோப்பை டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மகளிருக்கான 6வது டி20 உலககோப்பையில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகளில் 6வது உலககோப்பை டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று போட்டிகளில் அபாரமாக ஆடி அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நேற்று கயானாவில் நடந்த போட்டியில் பலப்பரிட்சை நடத்தினர்.

டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில், அதிரடி வீராங்கனை மிதாலி ராஜ் மற்றும் பந்துவீச்சாளர் மான்சி ஜோஷிக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

இந்தியாவின் தொடக்க வீராங்கனைகளான தனியா பாதியா 2 ரன்களிலும், ரோட்ரிக்ஸ் 6 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் மற்றும் நட்சத்திர வீராங்கனை மந்தனா ஜோடி அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

சிறப்பாக ஆடிய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 27 பந்துகளில் 3பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கிம்மின் பந்து வீச்சில் ராச்சேல் ஹானேசிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மற்றொரு முனையில் அதிரடி காட்டிய மந்தனா 55 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த இருவரின் ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகளால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 119 ரன்னில் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல் 3 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மந்தனா ஆட்ட நாயகியாக தேர்வானார்.

83 ரன்கள் விளாசிய மந்தனாவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் தனி ஹேஷ்டேக் அமைத்து பாராட்டி வருகின்றனர்.

More News >>