நீதிபதிகளின் சம்பள உயர்வை குறிப்பிட்டு, போக்குவரத்து ஊழியர்கள் விமர்சனம்
"ஐயா... நீதி எசமானே... எங்கள் நியாயமான சம்பளத்தையும், ஓய்வுக்கால 5 ஆண்டு பாக்கியையும் கேட்டா தப்பா" என்று போக்கிவரத்து ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதே, திடீரென இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டதால், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஆங்காங்கே பேருந்துகளிலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர், இதனால் தமிழகம் முழுக்க பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள், பல தனியார் பேருந்துகள் இதனை பயன்படுத்தி, டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தினர்
இதனிடையே, வேலை நிறுத்தத்துக்குத் தடை விதிக்கக்கோரி, இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, "போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், இந்த வேலை பிடிக்காவிட்டால், வேறு வேலைக்குப் போகலாம் என்றும், வேலை நிறுத்தம் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் எச்சரிக்கை விடுத்தார்,
ஆனால், நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்,
இந்நிலையில் "சம்பளம் போதாது என்றால் வேறு வேலைக்குப் போங்க" என்று கோபமாக பேசிய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சிக்கும் வகையில், நெல்லையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிமனையில் வாசகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது
திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து வளாகம் முன்புறம் சி.ஐ.டி.யு சார்பில் அமைந்திருக்கும் அறிவிப்பு பலகையில், நீதிபதிகளின் பழைய சம்பளத்தையும், இனி வழங்கப்படும் சம்பள விவரத்தையும் குறிப்பிட்டு, அதோடு "ஐயா... நீதி எசமானே... எங்கள் நியாயமான சம்பளத்தையும், ஓய்வுக்கால 5 ஆண்டு பாக்கியையும் கேட்டா தப்பா" என்று எழுதப்பட்டுள்ளது, இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இது "போக்குவரத்து ஊழியர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது" என்றும், "அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா காலத்திலிருந்து, போக்குவரத்து ஊழியர்களை போராடும் நிலையில் தான் வைத்திருக்கிறார்கள்" என்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் ஒருவர் புலம்புவதை கேட்க முடிந்தது.