அமிர்தசரஸ் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதி அதிவாலா கிராமத்தில் இருக்கும் நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக நடைபெற்றது.
சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் கட்டிடத்தின் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.
இந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சதறியதில் நிகழ்ச்சியில் இருந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், மூத்த காவல்துறை அதிகாரி சுரேந்தர் பால் சிங்க் பார்மர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்கள் முகத்தை மறைத்தபடி பைக்கில் வந்து வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியதாக விசாரணையில் தெரியவந்தது.
மேலும், குண்டு வெடிப்புக்கு காரணமாக மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் இரங்கலை தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.