கஜா புயல் பாதிப்பு: உணவு, குடிநீர் கிடைக்காததால் அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்

கஜா புயலால் கடும் சேதத்தை சந்தித்த நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள் இல்லாததால் மக்கள் கொந்தளித்துள்ளனர். பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் அமைச்சர்களின் வாகனங்களை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இங்கு, நிவாரண நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கவில்லை என்றும் இதுகுறித்து அதிகாரிகள் யாரும் பார்க்க வரவில்லை என்றும் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று கிராம மக்கள் ஒன்று திரண்டு வேதாரண்யத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பாக, நாகை-வேதாரண்யம் சாலை, விழுந்தமாவடி, கன்னித்தோப்பு பகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரில் தொண்டர்களுடன் வந்துக் கொண்டிருந்தார். இதனை கவனித்த கிராம மக்கள் அமைச்சரை நோக்கி கோஷமிட்டனர். அப்போது, கிராம மக்கள் மீது கார் மோதுவது போன்று வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கார் மீது கல்வீசி தாக்கினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதேபோல், காமேஸ்வரம் பகுதியில் நிவாரண பணிகள் நடக்காததை கண்டித்து பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் மாவட்ட கமாண்டர் எஸ்.பி.மனோகர் விரைந்து போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், செவி சாய்க்காத மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு தடியடி நடத்தி மக்களை விரட்டியடித்தனர்.

தொடர்ந்து, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் புயலில் பாதிப்பை பார்வையிட கிராம கைத்தறி தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் சென்று நிவாரண உதவி வழங்கினர். அப்போது, குடிநீர் கேட்டு பொது மக்கள் முற்றுகையிட்டனர்.

ஆலங்குடி தொகுதியில், குறைவான சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக தகவல் வெளியானதை அடுத்து, போலீஸ் ஜீப் மற்றும் வேனில் இருந்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் 20 போலீசாரை விவசாயிகள் சிறைபிடித்தனர். மற மடக்கியில் இருந்து 4 சாலைகளிலும் மரங்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருவ பொம்மை செய்து அதற்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா நேரில் வந்து பேசிய பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சிறைப்பிடித்த கைதிகளையும் விடுவித்தனர்.

More News >>