நாகையில் அமைச்சர் ஓ.எஸ் மணியனை கத்தியால் குத்த முயன்ற இளைஞரால் பரபரப்பு!

நாகை மாவட்டத்தில், கஜா புயல் நிவாரண பணிகளில் அதிருப்தி அடைந்த இளைஞர் ஒருவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஜா புயலால் நாகை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்கள் பகுதிகள் என்றும் காணாத சேதத்தை சந்தித்துள்ளது. இதனால், நிவாரணப் பணிகளும், சீரமைப்பு பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள 61 முகாம்களில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதுமான அளவு உணவு, குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துத்தரவில்லை என்றும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, போதுமான மின்வசதி இல்லாததால், குழந்தைகள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் அருகில் உள்ள கன்னித்தோப்பு என்ற பகுதியில் காரில் சென்றுக்கொண்டிருந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இதை கவனித்த இளைஞர் ஒருவர் திடீரென, மூங்கில் கொம்பால் அமைச்சரின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். பிறகு, மற்றொரு இளைஞர் அமைச்சரை கத்தியால் குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சரின் கார் ஓட்டுனர், உடனே காரை திருப்பி எடுத்து வேகமாக சென்று தப்பிவிட்டார். அமைச்சர் ஓ.எஸ்.மணியனை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

More News >>