கஜா புயலால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு? பெருமூச்சுவிடும் கட்சிகள்! Exclusive

பாஜக அரசுக்கு எதிராக ரபேல் ஊழல் உள்பட பல்வேறு ஆயுதங்களை ராகுல்காந்தி வீசினாலும், 'மோடியின் பிரசார வியூகத்துக்கு முன்னால் காங்கிரஸ் செயல் இழந்து போய்விடும்' என்கின்றனர் பாஜகவின் ஆலோசகர்கள் சிலர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியா என்பதற்கு பாஜகவினர் எந்தக் கருத்தையும் சொல்லாமல் அமைதி காக்கின்றனர்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பில் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. 'தமிழகத்தில் எந்தவிதக் கூட்டணியும் இல்லாமல் அதிமுக இருக்கிறது. பாஜகவுக்கும் அதே போன்ற நிலைதான். கொங்கு பெல்ட்டில் உள்ள பத்து எம்பி தொகுதிகளில் எடப்பாடி வெல்வார் என நம்புகிறார் மோடி. மற்ற பகுதிகளில் சாதிரீதியான அணுகுமுறையில் தேர்தலை சந்திக்க இருக்கிறது பாஜக' எனப் பேசி வருகின்றனர் மோடி ஆதரவாளர்கள்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 'பலசாலி' பேச்சு. பாஜக வட்டாரத்தின் உற்சாகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

இதைப் பற்றிப் பேசும் அரசியல் விமர்சகர்கள் சிலர், ' 1980 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்திக்கு இருந்த பிரசார வலிமையும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடிக்கு இருக்கும் பிரசார வலிமையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்திய அரசியலில் மோடியின் பிரசார வலிமை சாதனை படைத்துள்ளது. அது இந்திரா காந்தியைவிட வலிமையானது. அதை அறிந்துதான் 'பலசாலி' எனப் பொருள்படி ரஜினி பேசினார்.

இந்த வார்த்தை, தமிழிசைக்கு உற்சாகத்தை அளித்துள்ளது' என விளக்கியவர்கள்,

' 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் திமுகவினர் வெற்றி பெறுவதற்காகக் கடுமையாகப் போராடுவார்கள். தினகரனும் தன்னுடைய பலத்தைக் காட்டப் போராடுவார்.

இதில், ஆளும்கட்சிக்குச் சிக்கல் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தத் தொகுதிகளில் பெறக் கூடிய வெற்றிதான், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். இதை எடப்பாடியும் உணர்ந்து வைத்திருக்கிறார். 'ஆளும்கட்சிக்கு பாதிப்பு வரும்' என்பதால், 'இந்தத் தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை' என நம்பினார் ஸ்டாலின். ஆனாலும், இடைத்தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

பல கிராமங்களில் முதல்கட்ட விநியோகம் நடந்து வந்தது. தற்போது கஜா புயலின் பாதிப்பால் தேர்தல் தள்ளிப் போகவே வாய்ப்பு அதிகம். இது ஒருவகையில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு லாபம்தான்' என்கின்றனர்.

இதுதொடர்பாகப் பேசும் திமுகவினரோ, ' 7 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாமல் இருக்கிறோம். இப்போது மாவட்டங்களில் எதாவது கூட்டம் நடத்த வேண்டும் என்றாலும்கூட பத்து வட்டிக்கு வாங்கித்தான் நடத்துகிறோம். இதை ஸ்டாலினும் புரிந்து வைத்திருக்கிறார். எனவே, தேர்தல் தேதி அறிவித்த பிறகு பணத்தை இறக்கலாம் எனத் திட்டம் போட்டிருந்தோம். கஜா புயலால் தேர்தல் தள்ளிப் போகும் என நம்புகிறோம். இதனால் எங்களுக்குத்தான் லாபம்' என்கின்றனர்.

- அருள் திலீபன்

More News >>