ரூ. 400 கோடியை இங்கு கொண்டு வந்திருக்கலாம்! - கஜாவால் கடுப்பான திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்

கஜா புயலின் பாதிப்பால் நொந்து நூலாகியிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். அவரது கல்வி நிறுவனம் உள்பட சொத்துக்கள் பலவும் கஜா புயலால் சேதம் அடைந்துவிட்டன. இதனால்தான் 'ஆர்.கே.நகரில் இறைத்த 400 கோடியை இங்கு செலவிட்டிருக்கலாம்' என பதிவிட்டுள்ளார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவரான திவாகரன், செங்கமலத்தாயார் கல்லூரியை நிர்வகித்து வருகிறார். இந்தக் கல்லூரியின் சார்பில் ஏழை மாணவர்களுக்கு ஏராளமான கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வணிகநோக்கில்லாமல் இந்த நிறுவனம் செயல்படுவதாக பல நேரங்களில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் கஜா புயலின் தாக்கத்தால் சின்னாபின்னமாகிவிட்டது இந்தக் கல்லூரி. வகுப்பறைகள், மைதானத்தில் இருந்த மரங்கள், கல்லூரி பேருந்துகள் எனப் பலவும் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டன.

சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீடும் தப்பவில்லை. இருப்பினும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை போஸ் மக்கள் பணியகம் சார்பில் செய்து வருகிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

அதேநேரம், டெல்டா பகுதிகளில் தினகரனால் பெரிய அளவில் களமிறங்க முடியவில்லை.

கஜா பாதிப்புகள் குறித்துப் பதிவிட்டுள்ள ஜெய் ஆனந்த், ' ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் செலவு செய்த பணம் சுமார் ரூ 400 கோடிக்குக் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இந்தப் பணம் கஜா புயல் சேதாரத்தை எவ்வளவு சரி செய்திருக்கும் என இன்றைய இளைஞர்கள் ஒரு நொடி சிந்தித்தால் எதிர்காலத் தலைமுறை அமைதியில் வாழ வழி வகுக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலையும், 'தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்ய இலவச ஜெனரேட்டர் அனுப்பப்படும்' எனப் பதிவிட்டுள்ளார். அதேநேரம், டெல்டா பகுதிகளில் தினகரனால் பெரிய அளவுக்குக் களமிறங்க முடியவில்லை.

'ஒரத்தநாட்டில் அண்ணன் சிக்கிக் கொண்டார், இந்த இடர்ப்பாடில் இருந்து நகர முடியவில்லை' என வாண்டட்டாக தகவல் அனுப்பி வருகின்றனர் அமமுகவினர்.

'கஜா புயலில் சீருடை அணியாத ராணுவமாகக் களமிறங்க வேண்டும்' என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதை ஏற்று தீவிரமாக உழைத்து வருகின்றனர் உடன்பிறப்புகள். 'டெல்டாவை மையமாக வைத்து அரசியல் செய்து வரும் தினகரன் அண்ட் கோ பெரிதாக எந்தச் செயலிலும் இறங்கவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது' என்கின்றனர் டெல்டாவாசிகள்.

-அருள் திலீபன்

More News >>