நிவாரணப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்ப ஏற்பாடு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அரசு பேருந்துகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பும் வசதியை போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.

கஜா புயல் தாக்கம் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதைதவிர, ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பயிர்கள், தென்னை, வாழை மர தோப்புகள் கடும் சேதத்தை சந்திதுள்ளதால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்து தவித்து வருகின்றனர்.

இதனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள், பொது அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கு முயன்ற பால், அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை அரசு பேருந்துகளில் அனுப்பலாம் என்றும் அதற்காக கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் உதவ நினைப்பவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களை ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

More News >>