கஜா புயல்: மின்வாரியத்துக்கு 1000 கோடி இழப்பு

கஜா புயலினால் ஏற்பட்ட சேதங்களை இதுவரை மதிப்பிட்டதில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்துள்ளார்.

புயலினால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடும் பணி தொடர்ந்து வருகின்ற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சார சேவையை சீரமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் பி. தங்கமணி கூறியதாவது:

பல்வேறு மாவட்டங்களில் 84,836 மின் கம்பங்கள், 841 டிரான்ஸ்பார்மர் எனப்படும் மின்மாற்றிகள், 841, 201 துணை மின் நிலையங்கள் புயலால் சேதமடைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து 1,000 மின்சார பணியாளர்களும், ஏனைய மாவட்டங்களிலிருந்து 1,000 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மின் கம்பிகள் மேல் விழுந்த மரங்கள் அகற்றப்பட்ட பின்னரே கிராமங்களுக்கு மின்னிணைப்பு அளிக்க இயலும். கஜா புயலினை முன்னிட்டு போதுமான மின் கம்பங்கள் டெல்டா மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

கிராமப் பகுதிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மோட்டார் இயக்கி தண்ணீர் வழங்கப்படுகிறது. நிவாரண பணிகளை செய்வதற்கு நிதியாதாரம் தடையில்லை. இதுவரை செய்யப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி மின் வாரியத்துக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் மூன்று அமைச்சர்கள் மேற்பார்வையில் ஒருங்கிணைப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

More News >>