விவசாய கழிவுகளால் காற்று மாசு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
டெல்லியின் காற்று மாசு மிகவும் கவலைக்குரிய விஷயமாகி விட்டது. டெல்லி மற்றும் அருகிலுள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நெல் அறுவடை முடிந்த காலங்களில் வைக்கோல் போன்ற கழிவு பொருட்கள் கொளுத்தப்படுவதால் காற்று மாசடைவது அதிகமாகிறது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் டெல்லி, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் அறுவடை முடிந்த கழிவுகளை எரிப்பது வழக்கம். ஆகவே, அந்த சமயம் காற்றும் அதிகமாக மாசடைகிறது. ஓசோன், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை குறியீடாக கொண்டு காற்று மாசு அளவிடப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 11 வரை காற்று மாசின் அளவை பட்டியலிட்டு செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட கட்டுரையின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
காற்று மாசடைவதை தடுக்கும் வண்ணம், விவசாயிகள் பயிர்களை எரிப்பதை தவிர்க்க செய்யப்பட்ட உதவிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி விசாரணையின் தொடக்கத்தில் மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளருக்கு தீர்ப்பாணையம் உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு அரசுகளின் தலைமை செயலர்களுக்கும் இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குவதற்காக முன்னிலையாகும்படி கூறியிருந்தது.
அதன்படி, மத்திய அரசு 'கிரிஷி விகாஸ் கேந்திரம்' மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், பஞ்சாப் அரசு வைக்கோலை கொளுத்துவது குறித்த விழிப்புணர்வு பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பதாகவும், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும், டெல்லியில் விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இதுபோன்ற நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபடுவதை தடுக்க அபராதமும் விதிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தீர்ப்பாயத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, விவசாய மீதப்பொருள்கள் எரிப்பதை தடுக்க பல்முனை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. இது குறித்து 2019 ஏப்ரல் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய வேளாண் துறைக்கு உத்தரவிட்டது.