பேருந்து எரிப்பு வழக்கில் மூவர் விடுதலை- ஆளுநர் மாளிகை விளக்கம்
சட்டவிதிகளின் படியே தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டு காலமாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனால் 7 தமிழரையும் உடனே விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 3 பேரும் வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகினர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் 3 பேரை விடுதலை செய்ய ஒப்புதல் தெரிவிப்பதா? என கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், விடுதலை செய்யப்பட்ட 3 பேரும் கொலை செய்யும் நோக்கத்துடன் பேருந்தை எரிக்கவில்லை என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதையே தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
உரிய சட்டவிதிகளின்படியும் நடைமுறைகளின்படியுமே 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.