7 தமிழர் விடுதலை கோரி நவ.24-ல் வைகோ தலைமையில் மதிமுக போராட்டம்
ராஜீவ் வழக்கில் 27 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் 24-ந் தேதி சென்னையில் மதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள், தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில், கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் காயத்திரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகிய மூவரையும், உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய அண்ணா தி.மு.க. கொலையாளிகள் மூவரை, சிறையில் இருந்து விடுதலை செய்ய அ.தி.மு.க. அரசு முயற்சி எடுத்ததால், மத்திய அரசின் எடுபிடி வேலை பார்க்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விடுதலை செய்து இருக்கின்றார்.
2014 பிப்ரவரி 18 ஆம் நாள், இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் தலைமையிலான அமர்வு, 3 பேர் மரண தண்டனையை ரத்து செய்து, வாழ்நாள் சிறைத்தண்டனையாக ஆக்கியதுடன், அவர்களை விடுதலை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று, சூசகமாகக் குறிப்பிட்டது.
அண்ணா தி.மு.கவினரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றவும், அவர்களை விடுதலை செய்யவும் கருதித்தான், அன்றைய அண்ணா தி.மு.க. முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஏழு பேரையும் விடுதலை செய்வதாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசு அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு போட்டது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் ரஞ்சன் கோகோய் அவர்கள், 2018 செப்டெம்பர் 6 ஆம் நாள், ஏழு பேரையும் விடுதலை செய்யத் தமிழக அரசுக்கு உரிமை உண்டு எனத் தீர்ப்பு அளித்து இருக்கின்றது.
கண்துடைப்புக்காக, செப்டெம்பர் 9 ஆம் தேதி அதிமுக அரசு அமைச்சரவை, ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்ற நச்சு எண்ணத்துடன் தமிழக ஆளுநர் செயல்பட்டார். இதுகுறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டுக் கடிதம் எழுதினார்.
அவர்களை விடுதலை செய்யக்கூடாது என உள்துறை அமைச்சகம் கருதுவதாகக் கூறி, ஏழு பேர் விடுதலையைத் தடுத்து விட்டார். இது மிகப்பெரிய அநீதி ஆகும்.
அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவு, திட்டவட்டமான அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கி இருக்கின்ற நிலையில், மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவை இல்லை.
மூவரின் மரண தண்டனையை ரத்துச் செய்ய பல ஆண்டுகள் போராடி வருவதுடன், புகழ்மிக்க வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியைக் கொண்டு வந்து தடுத்து நிறுத்தியது மறுமலர்ச்சி தி.மு.கழகம்.
அந்த ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, நவம்பர் 24 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணி அளவில், வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், ஆயிரக்கணக்கில் திரண்டு இந்த அறப்போரில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.