கவர்னர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்

சென்னை: பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு சபாநாயகர் தனபால், சட்டமன்ற செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

கவர்கனருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, 10 மணிக்கு அவர் உரையை தொடங்குகிறார். அவரது உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த உரை ஒரு மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னரின் உரை முடிந்தபிறகு, அவரது உரையை தமிழில் சபாநாயகர் தனபால் வாசிப்பார். இவை அனைத்தும் மதியம் 12 மணிக்குள் நிறைவடையும் என்று தெரிகிறது. இத்துடன் இன்றைய கூட்டம் முடிவடையும்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பக்கூடும் என தெரிகிறது. கூட்டம் முடிந்த பிறகு, சபாநாயகரின் அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்ய இருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றபெற்ற டிடிவி தினகரனும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அவருக்கு 148 எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அவருக்கும் ஒரு நாள் பேச வாயப்பு அளிக்கப்படுகிறது.

More News >>