மீட்பு பணி ஊழியர்களை மின்சாரம் தாக்கியது- மருத்துவமனைக்கு தூக்கி சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை அருகே கஜா புயலால் சேதமடைந்த மின்மாற்றிகளை மாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் இருவரை மின்சாரம் தாக்கியது. மின்கம்பத்தில் இருந்து அவர்களை இறக்கி மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தூக்கிச் சென்றது அப்பகுதி மக்களை நெகிழ வைத்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டைதான் கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இரவும் பகலுமாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் ஊழியர்களுடன் விஜயபாஸ்கர் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் புதுக்கோட்டை கீரனூர் அருகே மின்மாற்றிகளை மாற்றிய ஊழியர்கள் இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்மாற்றி மீதே இருவரும் மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து கிரேன் உதவியுடன் இருவரும் கீழே இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிரேனில் இருந்து ஊழியர்களை கீழே இறக்கவும் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லவும் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாக இருந்தது அப்பகுதி மக்களை நெகிழ வைத்தது.