எப்போது தான் தீர்வு கிடைக்கும்? 5வது நாளாக தொடரும் பேருந்துகள் ஸ்டிரைக்
சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் இன்றுடன் 5வது நாளாக தொடர்கிறது. இதனால், அலுவலக நாட்களில் முதல் நாளான இன்று பணிக்கு செல்ல முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசின் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தற்காலிக போக்குவரத்து ஊழியர்களை தினக்கூலியில் பணியமர்த்தியது விளைவாக பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் பலியாகினர் என்பது குறிபபிடத்தக்கது.
இந்த வேலை நிறுத்தம் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இந்த நிலை இன்றுடன் ஐந்தாவது நாளாக தொடர்வதால், அலுவலக நாட்களில் முதல் நாளான இன்று தங்களில் பணிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால், நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு, தங்களின் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் நீடிக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதற்கு முன்பு போராட்டம் தீர்வுக்கு வருமா என்ற எண்ணம் பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது.