நிவாரண பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கும்படியும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தக்கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார். இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொண்ட நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இன்று நன்பகல் விசாரணையை மேற்கொண்டது.

அப்போது, கஜா புயல் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியது. போர்க்கால அடிப்படையில் மக்களின் தேவைகளை தமிழக அரசு பூர்த்தி செய்ய வேண்டும். புயல் பாதிப்புக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கேட்டுள்ள உதவிகள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கம் வேண்டும். இதற்காக, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பால், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியர்கள் உடனடியாக செய்து தர வேண்டும் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைந்ததா என்பதையும் உறுதி செய்து நாளை மறுநாள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புயல் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

More News >>