இன்போசிஸ் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிதி அதிகாரி

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸின் இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக ஜெயேஷ் சங்ராஜ்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த எம்.டி. ரங்கநாத், பதவி விலகுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் இம்மாதம் (2018 நவம்பர்) 16ம் தேதியுடன் விலகியுள்ளார். அதுவரை துணை தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த ஜெயேஷ் சங்ராஜ்கா, நவம்பர் 17ம் தேதி முதல் இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

பட்டய கணக்கரான (Chartered Accountant)ஜெயேஷ் சங்ராஜ்கா, 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 2012 டிசம்பர் மாதம் அவர் இரண்டாவது முறையாக பணியில் சேர்ந்தார். இதற்கு முன் மு சிக்மா (Mu Sigma) நிறுவனத்தில் நிதி பிரிவின் துணை தலைவர், ரீடிஃப்.காம் (Rediff.com) நிறுவனத்தின் நிதி பிரிவு தலைவர் மற்றும் டிஸ்மன் ஸ்பேயர் (இந்தியா) (Tishman Speyer India) நிறுவனத்தின் பெருநிறுவன கணக்குப் பிரிவு இயக்குநர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தில் மொத்தமாக 13 ஆண்டு பணி அனுபவம் கொண்ட ஜெயேஷ் சங்ராஜ்கா, இப்பதவிக்கு பொருத்தமானவர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜெயேஷ் சங்ராஜ்கா, இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக தொடரும்போது, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அடுத்த தலைமை நிதி அதிகாரியை தேர்ந்தெடுக்கும் பணியில் இருப்பதாக பங்கு சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோப்பில் இன்போசிஸ் கூறியுள்ளது.

More News >>