கஜா புயல் பாதிப்பு லைகா நிறுவனம் ரூ.1.1 கோடி நிவாரண நிதி!

கஜா புயல் தாக்கியதில் டெல்ட்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது.

தமிழர்களுக்கு உணவு வழங்கி வந்த டெல்ட்டா விவசாயிகள் உணவுக்கு தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். பலரது வாழ்வாதாரங்கள் அடியோடு அழிந்துள்ளன.

கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நடிகர்கள், அரசு நிவாரண நிதியில் பணத்தை கொடுக்காமல், தங்களது ரசிகர் மன்றம் மற்றும் நற்பணி மன்றங்கள் வாயிலாக சேவை செய்ய தொடங்கியுள்ளனர்.

நடிகர் சிவகுமாரின் குடும்பம் ரூ.50 லட்சத்தை கொடுத்து நிவாரண நிதியை தொடங்கி வைக்க, வரிசையாக விஜய்சேதுபதி ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும், சிவகார்த்திகேயன் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் அளித்துள்ளனர். நடிகர் விஜய் 40 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்களை 7 மாவட்டங்களுக்கு தேவை கேற்ப பிரித்து வழங்கும்படி தனது ரசிகர் மன்றத்துக்கு கட்டளையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினி 50 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்களை தனது மக்கள் மன்றத்தின் மூலம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், லைகா நிறுவனம் ரூபாய் 1.1 கோடியை நிவாரண நிதியாக தர முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், பலர் நிவாரண நிதியை தர முன்வந்துள்ளனர். இதனால், டெல்ட்டா மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் மீள வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

More News >>