ஆட்டுக்கறியை நாய் கறியாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமுமுக
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டுக்கறியை நாய்கறி என தகவல் வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஹைதர் அலி வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 17.11.2018 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் நாய்க்கறி பிடிபட்டிருப்பதாக பரபரப்பான செய்தி வெளியானது. இதுதொடர்பாக நாம் நடத்திய விசாரணையில், பிடிபட்டது அனைத்துமே ஆட்டுக்கறி என்பது தெளிவாகியுள்ளது.
ராஜஸ்தானில் காணப்படும் வெள்ளாடுகளின் வால்கள் ஒரு அடி வரை வளரக்கூடியவையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஆடுகளின் வால்கள் மிகவும் சிறியதாக இருக்கும்.
விலை குறைவு என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்த நீளமான வால்களை உடைய ஆட்டுக்கறியை இங்குள்ள வியாபாரிகள் வாங்கி அதனை சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருக்கும் ரயில்வே அதிகாரிகள் இந்த இறைச்சியைப் பார்த்துவிட்டு, எந்த ஆய்வும் செய்யாமல் ‘நாய்க்கறி’ என்று வதந்தி பரப்பியுள்ளனர். அந்த வதந்தியை ஊடகங்கள் ‘தீ’யாகப் பரவச் செய்துள்ளனர்.
முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்த வதந்தி பரவியதன் காரணமாக சென்னையில் ஆட்டுக்கறி விற்பனை செய்வோரும், பிரியாணி வியாபாரம் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இறைச்சி வியாபாரிகளும், ஓட்டல் உரிமையாளர்களும், ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வதந்திக்குக் காரணமான ரயில்வே அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், நாய்க்கறி என்று வதந்தி பரப்பிய ஊடகங்கள், உண்மையான செய்தியை வெளியிட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.