தமிழக காங்.க்கு மகாராஷ்டிராவின் சஞ்சய்தத் தலைவரா? குமுறும் திருநாவுக்கரசர்! Exclusive

தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார் திருநாவுக்கரசர். கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்; எல்லோரையும் அரவணைத்துச் செல்வேன் என பதவியேற்கும் போது சூளுரைத்திருந்தார் திருநாவுக்கரசர்.

அவரின் பேச்சும் உறுதியும் கதர்சட்டையினருக்கு நம்பிக்கையையும் மரியாதையையும் வரவழைத்திருந்தன. ஆனால், காலப்போக்கில் மற்ற தலைவர்கள் போல இவரும் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கினார்.

இதனால் நாள்தோறும் மற்ற கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்களை புறக்கணிப்பதும், அவர்களுக்கு எதிராக அரசியல் செய்வதும் திருநாவுக்கரசரின் வாடிக்கையானதால், அவரை மாற்றியே தீர வேண்டும் என  சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி என பலரும் டெல்லியில் கட்சி தலைமையிடம் போர்க்கொடி தூக்கினார்கள்.

இதனை ராகுல்காந்தி ஆய்வு செய்துகொண்டிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுடனும் முரண்பட்டார் திருநாவுக்கரசர். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் முறிவு ஏற்பட வேண்டும் என்கிற ரீதியில் அவரது நடவடிக்கைகள் இருந்ததால், இது குறித்து கனிமொழி மூலமாக குலாம்நபி ஆசாத்திடம் தெரிவிக்கப்பட்டதுதிமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேன்டுமாயிண் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருக்கக்கூடாது என்கிற அளவுக்கு ராகுலின் கவனத்துக்குகொண்டு சென்றது திமுக. இந்த நிலையில்தான், திருநாவுக்கரசரை அழைத்து ஒருமுறை கண்டித்தார் ராகுல்.

அதேசமயம் அவரை மாற்றலாம் என ராகுல் முடிவு செய்த போது, சிதம்பரத்தை அழைத்து , தமிழக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்க வேன்டும் என கேட்டார். ஆனால், லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக என்னை நியமித்திருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் இருப்பதால் தமிழக பொறுப்பை ஏற்பது கடினம் என சொல்லி சிதம்பரம் நிராகரித்தார்.

அப்படியானால், வேறு யாரை நியமிக்கலாம் என நீங்கள் சொல்லுங்கள் என ராகுல் கேடக, என்னால் யாரையும் பரிந்துரைக்க முடியாது. வேண்டுமானால், தமிழக காங்கிரசின் தேர்தல் பொறுப்பாளரான சஞ்சய்தத்தை தமிழக காங்கிரஸின் மேலிட பார்வையாளராக நியமித்து சில அசைண்மெண்டுகளை கொடுக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். இதை ஏற்ற ராகுல், இரு மாதங்களுக்கு முன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சஞ்சய்தத்தை மேலிட பார்வையாளராக நியமித்தார்.

அத்துடன் அவரிடம், தமிழக காங்கிரஸ் தலைவருக்குரிய பொறுப்புகளை நீங்கள் கவனிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார் ராகுல். இதன்படி செயல்படத்துவங்கியுள்ள சஞ்சய்தத், தமிழகம் முழுவதும் டூர் அடித்து காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்வீரர் கூட்டங்களை நடத்தி தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

பெரும்பாலும் இந்த கூட்டங்களுக்கு திருநாவுக்கரசர் அழைக்கப்படுவதில்லை. முக்கியமான சில கூட்டங்களில் திருநாவுக்கரசரே சென்று தன்னிச்சையாக கலந்து கொள்கிறார்.

மேலும் சஞ்சய்தத்தை அழைக்காமலே தனது தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் நேர்காணல் நிகழ்வுகளை நடத்தி வருகிறார் திருநாவுக்கரசர். இதனால், மாநில தலைவர் செய்யும் பணிகளை சஞ்சய்தத் செய்து வருவதால், யார் தலைவர் என்ற கேள்வி கதர்சட்டையினரிடம் எதிரொலிக்கிறது.

தேர்தல் நேரத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரங்களை திமுக தரப்பிடம் பேசுவதற்கு சஞ்சய்தத்தையே அனுப்புவது எனவும் ராகுல் முடிவு செய்திருப்பதாகவும் அதனை திமுக தலைமைக்கு தெரிவித்திருப்பதாகவும் சத்தியமூர்த்திபவனில் பேசப்படுகிறது.

 

-எழில் பிரதீபன்

More News >>