விஸ்வரூபமெடுக்கும் நாய்கறி விவகாரம்.. உணவு துறை அறிக்கையை தாக்கல் செய்ய கோரி மனு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2,100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான உணவு துறை அறிக்கையை தாக்கல் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி 2,100 கிலோ இறைச்சியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இறைச்சியின் வால் நீளமானதாக இருந்தால் நாய்கறி இறைச்சி என வதந்தி தீயாக பரவியது.
சென்னை பிரியாணி கடைகளில் நாய்கறி இறைச்சி கலக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இறைச்சி விற்பனையாளர்கள் ராஜஸ்தான் ஆடுகள் என்பதால் வால்நீளம்; அதிகாரிகள் கைப்பற்றியது ஆட்டிறைச்சிதான் என கூறினர்.
இந்நிலையில் சிக்கியது நாய்கறியா? ஆட்டிறைச்சியா? என்பது குறித்து விசாரிக்க ராஜஸ்தானுக்கு ரயில்வே போலீசார் சென்றுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.