இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளீர்களா? பாஸ்வேர்ட்டை மாற்றுங்க...

அதிகாரப்பூர்வமற்ற (inauthentic) விரும்புதல், பின்னூட்டம் மற்றும் பின்தொடர்தல் ஆகிய செயல்பாடுகளை அனுமதிக்கும் பயனர் கணக்குகள்மேல் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக இன்ஸ்டாகிராம் (Instagram) நிறுவனம் உறுதி செய்துள்ளது.

பயனர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நடத்தை நெறிமுறைகளில் இதை தெரிவித்துள்ள அந்நிறுவனம், அதிகாரப்பூர்வமற்ற செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான கருவியே அவற்றை நீக்கிவிடும் என்று கூறியுள்ளது.

மூன்றாம் நபர் செயலிகளால் இன்ஸ்டாகிராமில் பதிவுகள், பகிர்தல், விரும்புதல் மற்றும் பின்னூட்டங்கள் இடப்படுவதாக புகார் எழுந்தது. அதுபோன்ற செயலிகளிடம் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ள பயனர்கள், கணக்குக்கான கடவுச்சொல்லை (password) மாற்றிக்கொள்ளும்படி இன்ஸ்டாகிராம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வகை பயனர்களுக்கு எச்சரிக்கை (alert) செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செய்தி இதழான 'நியூ யார்க் டைம்ஸ்', சமூக ஊடகத்தில் ஆயிரத்துக்கும் குறைவான பின்தொடரும் பயனர்களை கொண்டிருக்கும் நானோஇன்ஃப்ளூயன்ஸர் (nanoinfluencers) என்னும் வகையினரை குறித்து கட்டுரை வெளியிட்டிருந்தது. எவ்வகை சமூக ஊடகமென்றாலும் அதிலுள்ள நானோஇன்ஃப்ளூயன்ஸர் வகையினர், தயாரிப்பு விளம்பரங்களின் மூலம் தங்களை பின்தொடரும் வகையில் பயனர்களை ஈர்க்க முடியும் என்று அந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டிருந்தது. சந்தைப்படுத்தும் முகமைகள் இதற்கென குறிப்பிட்ட தரகு தொகைகளையும் வழங்குவதாக தெரிகிறது.

நானோஇன்ஃப்ளூயன்ஸர் வகையினர் மூலம் தயாரிப்புகளை பற்றி ஆங்காங்கே விளம்பரங்களை செய்ய முடியும் என்றும் நம்பப்படுகிறது.

போலி கணக்குகளை நீக்கும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஏற்கனவே இன்ஸ்டாகிராம் கூறி வந்தாலும், அவ்வகை பயனர்கள் இடும் பதிவுகள் குறித்த நடவடிக்கையை இக்கட்டுரை வெளியான பிறகுதான் முதன்முறையாக அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக், கடந்த ஆறு மாதங்களில் 150 கோடி போலி பயனர் கணக்குகளை முடக்கியுள்ளதாக கூறியுள்ள அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், விளம்பரங்களுக்கான பதிவுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாதந்தோறும் 250 கோடி பயனர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

More News >>